search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமராஜர் ஆட்சி"

    காமராஜர் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்றால் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறினார்.
    திசையன்விளை:

    திசையன்விளையில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    1967-ல் தி.மு.க., காமராஜரை தோற்கடித்தது. அதன்பிறகு தேசிய கட்சிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தனர். இன்று வரை அதே நிலை தொடர்கிறது. தி.மு.க.,அ.தி.மு.க. என்று மாறி மாறி ஆட்சி நடத்துகிற ஊழல் ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து காமராஜர் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்றால் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

    ஆன்மீக அரசியல் தான் காமராஜர் ஆட்சி. காமராஜரை தோற்கடித்த இந்த தமிழகத்தில் ஊழல் இல்லாத கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என அமித்ஷா கூறியுள்ளார். ஊழல் இல்லாத கட்சி என்றால் ரஜினியின் ஆன்மீக அரசியல் கட்சி தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


    தமிழ்நாட்டில் சிலை திருட்டை தடுக்க மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். சிலை திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். சிலை திருட்டை தடுக்க சிறப்பு காவல்படை உருவாக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் அரசு பாகுபாடு பார்க்கக்கூடாது. இந்து ஏழை மாணவர்களுக்கும் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். அதற்காக இந்து மக்கள் கட்சி தொடர்ந்து போராடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பேட்டியின் போது தென்மண்டல பொதுச் செயலாளர் கார்த்தீசன், மாவட்ட துணைத்தலைவர் சண்முகவேல், ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக திசையன்விளையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு அர்ஜூன் சம்பத் மாலை அணிவித்தார். #ArjunSampath #Rajinikanth
    தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மீண்டும் மலர முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று காங். தொண்டர்களுக்கு திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவர் தளவாய் பாண்டியன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் சங்கர்கணேஷ் வரவேற்றுப் பேசினார்.

    முன்னதாக காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் நேரு பவனத்தில் ராம்கோ குரூப் முன்னாள் சேர்மன் பி.ஆர். ராமசுப்பிரமணியராஜா உருவப்படத்தை திறந்த வைத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் 32 மாவட்டமாக இருந்ததை நிர்வாக வசதிக்காக காங்கிரசில் 50 கட்சி மாவட்டமாக ஏற்படுத்தப்பட்டிருந்தது. நான் தலைவராக வந்தபிறகு அதனை 72 கட்சி மாவட்டமாக விரிவுபடுத்தி உள்ளேன்.

    32 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதை 50 லட்சம் உறுப்பினர்களாக உயர்த்த வேண்டும் என்கிற இலக்கு வைத்து அதற்கான வழி முறைகளை செயல்படுத்தி வருகிறோம்.

    தமிழத்தில் 60 ஆயிரம் பூத் கமிட்டிகள் உள்ளன. அனைத்து பூத் கமிட்டிக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். காமராஜர் ஆட்சியில்தான் தமிழகத்தில் ஏராளமான கனரக ஆலைகள், அணைக் கட்டுகள் திறக்கப்பட்டன. கிராமங்கள் தோறும் பள்ளிகள் உருவாக்கப்பட்டு பொற்கால ஆட்சி நடந்தது.

    தமிழகத்தில் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் கொண்டு வந்தே தீருவோம் என்று சபதம் எடுத்துக்கொண்டு காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் உள்ள நிலவரப்படி தமிழகத்தில் காங்கிரஸ்தான் இரண்டாவது பெரிய கட்சியாக திகழ்கிறது. எனவே காமராஜரின் பொற்கால ஆட் சியை விரைவில் அமைத்தே தீருவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் முன்னாள் நகரத் தலைவர் பீமராஜா நன்றி கூறினார். கூட்டத்தில் முன்னாள் எம்.பி.க்கள் ராமசுப்பு, விஸ்வநாதன், மாநில மகளிரணி தலைவர் ஜான்சிராணி, மாநில செய்தி தொடர்பாளர் அந்தோணிராஜ், நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் சிவகுமார், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் தமிழ்செல்வன், மகேஸ்வரன், அய்யனார், செல்வராஜ், ராதாகிருஷ்ணன், ராஜா ராம், பசும்பொன், மாவட்ட மகளிரணி தலைவி காளீஸ் வரி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர்சித்திக், தொழிற்சங்கம் சார்பில் எச்.எம்.எஸ். கண்ணன், ஜ.என்.டி.யு.சி. பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×